ஆசிரியர்: ஜெயமோகன்
வகை: சிறுகதைகள்
ஒவ்வொரு புத்தகமும் ஒரு விஷயத்தை கற்று தரும். எனது பார்வையில், நான் இப்போது செய்து கொண்டிருக்கின்ற செயல்கள் யாவும் ஏதோ ஒரு புத்தகத்தின் சாயல் என்பதை படித்த புத்தகங்களை மீண்டும் வாசிக்கையில் உணர்கின்றேன்.
எனது மனதை வருடிய இன்னுமொரு புத்தகம் அறம் ஆகும். ஆசிரியர் ஜெயமோகன் அவர்கள் இணையதளத்தில் தொடர்ச்சியாக வெளியிட்ட 12 கதைகளே அறம் என்னும் நூலாக வந்துள்ளது.
இந்த நூல் அறம் எனும் தலைப்பின் கீழ் வந்துள்ள உண்மை மனிதர்களின் கதை என்னும் துணை தலைப்பே இந்த நூலை நோக்கி நம்மை படிக்க ஆர்வத்தைத் தூண்டுகிறது
அறம் என்ற மையப்புள்ளியை சுற்றி புனைவும் உண்மையும் கலந்த 12 கதைகள்.
1.அறம்
2 வணங்கான்
3.தாயார் பாதம்
4.யானை டாக்டர்
5.சோற்றுக் கணக்கு
6.நூறு நாற்காலிகள்
7. பெருவலி
8. சிலுவை
9 கழுத்து
10.மத்துறு தயிர்
11. கோட்டி
12. உலகம் யாவையும்
அறம்:
வறுமை பீடித்த எழுத்தானுக்காக மனசாட்சியின் கதவை தட்டி நீதியை நிலை நாட்டிய கண்ணகியின் கோபக்கணலை மிஞ்சும் படிக்காத ஆச்சியின் அறம் மதிய வெயிலில் உருகுகின்ற ஜல்லி சாலைகளின் வெப்பத்தை ஒட்டியது.
வணங்கான்:
ஆண்டாண்டு காலமாக முடக்கப்பட்ட சாதிய ரீதியான வன்மங்களில் இருந்து உயிர்த்தெழுந்த " கும்பிடுறேன் சாமி, வணங்கான்" விரல் இடுக்குகளில் முளைத்தெழுந்த ஆறாவது விரல். அவ்விரலுக்கு தங்க மோதிரம் இட்ட ஆங்கிலேயே சர்வாதிகாரிகளின் கம்யூனிஸ அறத்தை பறைசாற்றும் பக்கங்களால் நிமிர்ந்து நிற்கிறான் "வணங்கான்
யானை டாக்டர்:
பீர் பாட்டில் ஒரு சென்டிமீட்டர் தூரம் யானையின் காலில் ஏரி புழு வைத்து அதை வெளியே எடுக்கையில் குமட்டுகின்ற ரத்தத்தோடு வருகின்ற புழுக்களை வாரிக்கொட்டி மருந்திட்டு காப்பாற்றிய டாக்டர்.வி. கிருஷ்ணமூர்த்திக்கு வழங்கப்படா "பத்ம விருதுகளில்"புழுக்கள் நெழிவதைக் கண்டேன். தும்பிக்கை தூக்கி பிளிறலோடு வணங்கிக் செல்லும் யானைகளின் உலகில் அறத்தோடு நின்ற இவர் விருதுகளை புறம் தள்ளிய அழியா சகாப்தம் என்பதை உணர்ந்த நிமிடங்கள் அலாதியானது.
சோற்றுக்கணக்கு:
ஆழ்குழி விழுந்த கண் பசித்த வயிற்றோடு ரோட்டில் அடிபட்ட நாயின் சதையை நாவில் ஏந்த நினைக்கையில் ஆறு வருடம் விலையில்லா கறியும் சோறும் வயிறு புடைக்க பரிமாறிய நவீன கர்ணன் கெட்டில்சாகிப்பின் கரங்களில் அறத்தின் ரேகைகள் பெருமிதத்தோடு தவழுவதை கண்களில் பொங்கிய கண்ணீரோடு
வாரி அணைத்துக் கொண்டேன்.
நூறு நாற்காலிகள்:
ஈக்கள் மொய்க்கும் குப்பைமேடுகளை அவமானப் படிக்கற்களால் ஏறி அமர்ந்த நாயாடி கூட்டத்தின் ஐ.ஏ.எஸ் அதிகாரியின் நாற்காலியில் இன்னும் துர்நாற்றவாடைகளை அள்ளி வீசும் மேற்தட்டு வகராக்களின் கொட்டத்தை அடக்க சமத்துவ அறம் உட்கார்ந்து பேச லட்சம் நாற்காலிகள் கண்முன் முளைக்க என் இருக்கையை சற்று தடவி பார்த்துக் கொண்டேன்.
ஓலைச் சிலுவை:
Dr.Theodore Howard Someervell மதத்தோடு மனிதர்களை நேசிக்க தெரிந்த இயேசு மகான். உன்னுள் இருக்கும் மனிதமே இறைவனை அடைய ஒரே வழியென அறிந்தவர். ஓலைக் குடிசையின் ஓலையில் செய்த சிலுவையை பரிசளித்த ஏழைச் சிறுமி அறியாமை, தீண்டாமை அறத்தை அழிக்க Someervellன் இறையாண்மையை தட்டி எழுப்பிய வறுமையில் வாடிய இந்திய நாட்டின் மகாலெட்சுமி.
கோட்டி:
தனக்கென விதிகளை அமைத்துக் கொண்டு அறத்தை உயிர் மூச்சாகக் கொண்டு அதை விடுத்து மருத்துவ உதவி பெற விரும்பாமல் வாழ்ந்து இறந்த கோமாளியாக சித்தரிக்கப்பட்ட
பூமேடையின் வாழ்க்கை "கோட்டி". அறத்தோடு வாழ்ந்தால் காந்தியின் தொப்பி மட்டும் இறுதி ஊர்வலத்தில் கிடைக்கும் என்பதை அறமற்ற முடிவாக முடிக்கையில் காந்தியின் தொப்பி இன்று விற்பனையில் உள்ளதா என்பதை எனக்கு நானே கேட்டுக் கொண்டேன்.
உலகம் யாவையும்:
"World Citizenship" இந்த வார்த்தையை படிக்கும் பொழுது தேசியவாத போர்களால் உயிர் நீத்த, நீர்க்கின்ற மரணக் கிணறுகள் மண்ணோடு மண்ணாக போகட்டும் என சாபம் விடுத்தேன். காரி டேவிஸ் உலகத்தை தன் உள்ளங்கையில் வைத்து இறுக்க மூடிக்கொண்ட உலகத்தவன். எல்லைகள் இடிக்கப்பட்டு உலகக் குடிமகனாக வாழ்வதே "அறம்" என்று போதித்து வாழ்ந்த அவனோடு பேசலாம் இந்தக் கதையில்.
எழுத்தாளர் ஜெயமோகன் பிரயோகித்துள்ள மொழிநடை, பேச்சுவழக்குகள் அடர்ந்த காட்டுக்குள் உங்களை இழுத்துச் சென்று திடீரென மேல்வானில் முட்டி கொட்டும் அருவியின் முன் கொண்டு சேர்த்து விடும். அந்த அருவி ஒன்று உங்கள் கண்களில் இல்லை மனதில் பெருகி ஓடுவதை தடுக்கவே இயலாது.
கூரிய பேனா முனையோடு பற்றி எரிவது போல் பக்கத்துக்கு பக்கம் முன்வைக்கின்ற வார்த்தைகளால் கோர்க்கப்பட்ட சில வசனங்கள் "Drop Dead, Sharp and Pointed Questions". பேனா முனையின் உரசலை உங்கள் மனதோடு உரசிப் பார்த்து நம்மை நாம் சுயபரிசோதனை செய்ய "அறத்தை கையில் ஏந்துங்கள்"
Comments
Post a Comment