நிலங்களின் வகைகள்
நன்செய் நிலம்:
தமிழ்நாட்டில் உள்ள வேளாண்மை செய்யும் நிலங்களில் நீர்ப்பாய்ச்சல் ஆதாரம் மிகுந்த நிலப் பகுதிகள், மண்ணின் தரம் மற்றும் வயனம் மேம்பட்டதுமான விவசாய நிலம் நன்செய் என்ற சொல்லால் குறிக்கப்படுகின்றன.
ஆற்றுநீர், தேக்கி வைக்கப்பட்ட குளத்து நீர், நன்செய நிலங்களில் உள்ள கிணற்று நீர் ஆகிய நீர்வள ஆதாரங்களைக் கொண்டு ஓர் ஆண்டுக்கு இரண்டு அல்லது மூன்று போகங்கள் வரை வேளாண்மை செய்யும் நிலத்தொகுதி நன்செய் எனப்படுகிறது.
இந்த வகைப்பாடுடைய நிலங்களில் அதிகப்படியான பயிராக நெல்,கரும்பு, வாழை போன்ற பணப்பயிர்கள் மட்டுமே விளைவிக்கப்படுகின்றன.
புன்செய் நிலம்:
தமிழ்நாட்டில் உள்ள வேளாண்மை செய்யும் நிலங்களில் நீர் பாய்ச்சல் ஆதாரம் இல்லாத நிலப் பகுதிகள் புன்செய் என்ற சொல்லால் குறிக்கப்படுகின்றன. இந்நிலத்தில் நீர் ஆதாரம் குறைவாகத் தேவைப்படும் பயிர்கள் மட்டுமே பயிரிடப்படுகின்றன. பெரும்பாலான புன்செய் நிலங்கள் கிணறுகள் மூலம் பாசன வசதி பெறுகின்றன.
இந்த வகைப்பாடுடைய நிலங்களில் அதிகப்படியான பயிராக பருத்தி, மிளகாய், சோளம், கம்பு, வரகு, தினை, வெள்ளைச்சோளம், செஞ்சோளம், இருங்கு சோளம், கருஞ்சோளம், அரிசிக்கம்பு, செந்தினை. கருந்தினை, பைந்தினை,பெருந்தினை, சிறுதினை. காடைக்கண்ணி, கேழ்வரகு (கேப்டை), வரகு, குதிரைவாலி, பெருஞ்சாமை, செஞ்சாமை, சாமை போன்ற சிறுதானிய வகைகள் மற்றும் பயறு வகைகள் மட்டுமே விளைவிக்கப்படுகிறது.
மானாவாரி நிலம்:
மழையை பெருமளவு நம்பியுள்ள நிலப்பகுதி மானாவாரி நிலம் எனப்படும்.
பட்டா நிலம் :
கைப்பற்றில் உள்ள நன்செய், புன்செய், மானாவரி நிலங்களை உள்ளடக்கிய விவசாய நிலப்பகுதிகள் பட்டா நிலம் எனப்படும். இதன் உடமைதாரர்கள் பட்டாதாரர்கள் எனப்படுவர்.
புறம்போக்கு நிலம்:
அரசுக்கு சொந்தமானதும், பட்டா மூலம் ஒப்படை செய்யப்படாததுமான இடங்கள் புறம்போக்கு எனப்படும். இதில் வண்டிபாதை புறம்போக்கு, வாய்க்கால் புறம்போக்கு, மயான புறம்போக்கு, நீர்நிலை புறம்போக்கு, நத்தம் புறம்போக்கு என பல வகைபாடுகள் உள்ளன. இப் புறம்போக்கு நிலங்கள் தனியாரல்லாத, மாநில அரசு, நடுவன் அரசு மற்றும் உள்ளாட்சி அமைப்புகளால் பராமரிக்கப்படுகின்றவை ஆகும்.
கிராம நத்தம்:
நத்தம் என்ற சொல்லுக்கு குடியிருப்பு பகுதி எனப் பொருள். கிராம நத்தம் என்றால். கிராமத்தில் இருக்கும் குடியிருப்பிற்கு என ஒதுக்கப்பட்ட நிலமாகும். நத்தம் புறம்போக்கு நிலம் எனில், நத்தம் குடியிருப்பு பகுதியில் இருக்கும் புறம்போக்கு நிலம் ஆகும். கிராமக்குடியிருப்புகளை சுற்றிலும் இருக்கும் காலியிடங்களும், எதிர்கால தேவைக்காக, 'நத்தம்" என்றே வகைப்படுத்தப்பட்டுள்ளன.
பஞ்சமி நிலம்:
பஞ்சமி நிலச்சட்டத்தின்படி, இந்தியா முழுவதும், பட்டியலின மக்களின் வாழ்வை மேம்படுத்த ஏதுவாக நிலங்கள் இலவசமாக அளிக்கப்பட்டன. இந்த நிலங்களில், பட்டியலின மக்கள் பயிர் செய்தோ, வீடுகள் கட்டிக் கொண்டோ அனுபவிக்கலாம். முதல் பத்தாண்டுகளுக்கு யாருக்கும் விற்கவோ. தானம் செய்யவோ, அடமானம் வைக்கவோ. குத்தகைக்கோ விடக்கூடாது, அதன்பிறகு அவர்கள் விற்பதாக இருந்தால், பட்டியலின வகுப்பைச் சார்ந்தவர்களிடம் (Depressed Class) தான் விற்கவோ, தானம் செய்யவோ. அடமானம் வைக்கவோ,குத்தகைக்கு விடவோ உரிமை வழங்கப்பட்டது. வேறு வகுப்பினரிடம் விற்றால் அந்த விற்பனை செல்லாது. மீறி வாங்கினால், எந்த காலத்திலும், அந்த நிலங்களை வாங்கியவரிடமிருந்து, அரசு பறிமுதல் செய்யலாம். அதற்கு நஷ்ட ஈடு கிடையாது. ஆதிதிராவிட மக்களை யாரும் ஏமாற்றி விடக்கூடாது என்கிற காரணத்தால் இந்த நிபந்தனைகள் உருவாக்கப்பட்டுள்ளது. தங்களுடைய வாரிசுகள் சொத்தைப் பங்கிட்டுக் கொள்வதில் எவ்விதத் தடையுமில்லை.
தீர்வை ஏற்பட்ட தரிசு:
சில நிலங்கள் நிலவரி (தீர்வை) விதிக்கப்பட்டிருந்தும் நிலவரித் திட்டத்தின் போது உரிமை கொண்டாடாத நிலையில் அவை தீர்வை ஏற்பட்ட தரிசு என வகைப்படுத்தப்பட்டுள்ளது. சில மாவட்டங்களில் "அனாதீனம்" எனவும் அழைக்கப்படுகிறது.
பசலி ஆண்டு :
கிராம கணக்குகள் பராமரிக்கப்படும் ஆண்டு முறை பசலி ஆண்டு எனப்படும். இது ஒரு ஆங்கில ஆண்டின் ஜூலை - 1ல் துவங்கி அடுத்த ஆண்டின் ஜூன் 30 ல் முடிகிறது.
புலப்படப் புத்தகம் :
கிராமத்திலிருக்கும் அனைத்து சர்வே புலங்களின் வரைபடங்கள் ஒன்று சேர்ந்த தொகுப்பே புலப்படப் புத்தகம் (Field Measurement Book) எனப்படும். ஒவ்வொரு சர்வே புலத்திற்கும் தனித்தனி புலப்படம் உரிய உட்பிரிவுகளின் எல்லை, அளவுகள் குறிக்கப்பட்டிருக்கும். இப்புலத்தில் உள்ள வீடு, கிணறு, வாய்க்கால் போன்ற விளக்கிகளும் பதியப்பட்டிருக்கும். இந்த விளக்கிகளை FMB- யில் காண்பிப்பதால் பிற்காலத்தில் ஏற்படும் தாவாக்களை தீர்க்க இது முக்கிய சாட்சியாக அமையும். மேலும், புலங்களின் இருப்பிடங்களை தெரிந்து கொள்வதற்கும் சாகுபடி பதிவு செய்வதற்கும் பெரிதும் உதவுகிறது
கிராமப்படம்:
இது கிராமத்தில் உள்ள அனைத்து சர்வே புலங்களின் கூட்டுப்படமாகும். புலத்தின் எல்லைகளும் கிராம எல்லைகளும் வரையப்பட்டிருக்கும். இதில் உட்பிரிவுகள், அதன் அளவுகள் ஆகியன இருக்காது. இதனால் புலத்தணிக்கை செய்ய வரும் அலுவலர்களுக்கு சரியான இடம் தானா ? என்பதை அடையாளம் தெரிந்து கொள்ள முடியும்.
D-ஸ்கெட்ச்
இது ஒரு கிராம வரைபடத்தை பல பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு பல புல எண்கள் அடங்கிய ஒரு பகுதிக்கு ஒரு வரைபடமாக தயார் செய்யப்படுகிறது. இது "கண்டம் ஸ்கெட்ச்" எனவும் அழைக்கப்படும். இந்த வரைபடத்தை பயிராய்வு பணிகள், புறம்போக்கு இடத்தை அடையாளம் காணுதல் ஆகிய பணிகளுக்கு பயன்படுத்தலாம்.
"அ" பதிவேடு:
புலப்படம், கிராமப்படம் நில அளவைத்துறையால் தயாரிக்கப்படுகிறது. "அ"பதிவேடு நிலவரித்திட்டத்துறையால் தயாரிக்கப்படுகிறது. இதில் ஒவ்வொரு புல உட்பிரிவிற்கும் முந்தைய தொடர்பு விபரங்கள், வகைபாடு, மண் வயனம், விஸ்தீரணம், தீர்வை, பட்டா எண், உரிமையாளர் பெயர் மற்றும் குறிப்பு கலம் போன்றவை பதியப்பட்டிருக்கும். குறிப்பு கலத்தில் புறம்போக்கு நிலம் எனில் எந்த வகையான புறம்போக்கு என்பது பதியப்பட்டிருக்கும். நஞ்சை நிலம் எனில் தண்ணீர் ஆதாரமும், புறம்போக்கு எனில் எந்தவகை ஆதாரம் என்றும் பதியப்பட்டிருக்கும். கிராமத்தின் அமைவிடம் மற்றும் கிராமம் பற்றிய விபரம் அனைத்தும் முன்பக்கத்தில் சுருக்கமாக குறிக்கப்பட்டு இருக்கும். பொதுவாக ஒவ்வொரு வருவாய் புல உட்பிரிவுகளின் முழு விபரங்களும் பதியப்பட்டு இருக்கும். இப்பதிவேட்டில் புல எண் 1 முதல் தொடங்கி அக்கிராமத்தில் உள்ள அனைத்து புல எண் / உட்பிரிவு எண்கள் வரிசையாக குறிப்பிடப்பட்டிருக்கும். விவசாய நிலத்திற்கு ஒரு பதிவேடு, கிராம நத்தத்திற்கு ஒரு பதிவேடு என ஒரு வருவாய் கிராமத்திற்கு இரண்டு "அ"பதிவேடுகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன.
சிட்டா:
கிராமத்தில் உள்ள அனைத்து நில உரிமையாளர்களின் பெயர்களும் அகர வரிசைப்படி பட்டியலிட்டு (வரிசை எண் கொடுத்து) பட்டா எண் கொடுக்கப்பட்டு இருக்கும். அக்கிராமத்தில் உள்ள ஒவ்வொருவருக்கும் இருக்கும் நஞ்சை / புஞ்சை நிலங்களின் அனைத்து புலங்கள் பற்றிய விவரமும் ஒரு பட்டா எண்ணின் கீழ் கொடுக்கப்பட்டு இருக்கும்.
சர்வே புலங்கள் அமைக்கும் முறை:
சர்வேயில் உட்பிரிவு என்பது வருவாய் புலம் எனப்படும். பல வருவாய் புலங்களை ஒன்று சேர்த்து சர்வே புலங்களாக அமைக்கப்படும்.
பட்டா நிலங்களை பொறுத்த வரையில் நஞ்சையாக இருப்பின் 2 ஹெக்டேர் (5 ஏக்கர் ஒரு சர்வே புலமாகவும், புஞ்சையாக இருப்பின் 4 ஹெக்டேர் (10 ஏக்கர் ) ஒரு சர்வே
புலமாகவும் அமைக்கவேண்டும். அதில் 20 உட்பிரிவுகளுக்கு மேல் இருக்கக்கூடாது. 2) 20 உட்பிரிவுகளுக்கு மேல் இருக்கும் போது நஞ்சையில் 80 ஏர்ஸ்ம் (2.00 ஏக்கரி
புஞ்சையில் 1.60 ஹெக்டேர் (4.00 ஏக்கரி வைத்து சர்வே புலங்கள் அமைக்க வேண்டும். 3) 1 நபருக்கு ஒரே இடத்தில் எவ்வளவு பரப்பு இருந்தாலும் அதை ஒரே சர்வே புலமாக வைத்துத்தான் சர்வே செய்ய வேண்டும். மேலே சொல்லப்பட்ட விதிமுறைப்படி பல சர்வே புலமாக பிரித்து அளவை செய்யக்கூடாது.
4) அரசு புறம்போக்கு நிலங்களான மலை, குன்று, காடு, ஆறு, மந்தைவெளி, கிராம நத்தம் ஆகியன அவற்றின் அமைவிடத்தின்படி, ஒரே சர்வே புலமாக அமைத்து அவைகளின் குறுக்கே மூலைவிட்டக்கோடுகள் அமைத்து முக்கோண முறைபடி சர்வே செய்வது கடினம். எனவே, இவைகளை சிறு சுற்றுப்புலங்களாக (Minor Circute) அமைத்து சுற்றளவு மட்டும் அளவு செய்து, கோண அளவு எடுத்து அளவை செய்ய வேண்டும்.
சர்வே கற்கள் "A" கல் : (A-Stone)
இக்கல் 90 × 22.5 x 22.5 cm (3 அடி × 9 அங்குலம் × 9 அங்குலம்) நீளமுடையது. இதன் ஒரு பக்கத்தில் ஒரு பெரிய அம்புக்குறி மேல் நோக்கி செதுக்கப்பட்டிருக்கும். "ஏ" கல் கிராம முச்சந்தியிலும், பாயிண்டர் என்ற சிறப்புப்பெயர் பெற்ற கல், கிராம முச்சந்திக்கு அடுத்த பை ஜங்சனிலும் நடப்படும். கிராம "முச்சந்தியில்" நடப்படும் கல்லின் மேல் புறம் புள்ளியுடன் கூடிய முக்கோண குறியும், பாயிண்டரில் நடப்படும் கல்லின் தலைப்பகுதியில் புள்ளியுடன் கூடிய இரு இணைக்கோடுகளும் செதுக்கப்பட்டு இருக்கும்.
சர்வே கற்கள் "B" கல் : (B-Stone)
60x15x15 cm (2 அடி × 6 அங்குலம் x 6 அங்குலம்) அளவுடையது. ஒரு பக்கத்தில் அம்புகுறி மேல்நோக்கி இருக்கும். இது புல முச்சந்தி, கிராம எல்லை வளைவுகள் மற்றும் கண்ட எல்லைகளில் நடப்படும். கிராம எல்லையில் நடப்படும் கற்களின் தலையில் "+" மார்க்கும் (கூட்டல் குறி) கண்ட எல்லையில் நடப்படும் கல்லின் தலையில் சிறு குழியும் குறிக்கப்பட்டு இருக்கும்.
x
Comments
Post a Comment